விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும், அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது. பல இடங்களில் நிவாரணம் வழங்கவில்லை என, பொது மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் நகராட்சி ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட வடக்கு தெரு, கமலா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என, அ.தி.மு.க., கவுன்சிலர் ராதிகா செந்தில் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 10:20 மணிக்கு, சென்னை நெடுஞ்சாலையில் காட்பாடி ரயில்வே பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.டவுன் சப் - இன்ஸ்பெக்டர் பிரியங்கா, வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து, 11:20 மணி வரை மறியலில் ஈடுபட்டதால், விழுப்புரம் - சென்னை மார்க்கத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.அதுபோல, விழுப்புரம் வி.மருதுார், சந்தானகோபாலபுரம், பஞ்சமாதேவி கிராம மக்கள், செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் வராகநதி ஆற்று பாலத்தில், அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.மேலும், மேல்மலையனுார் அருகே வள்ளலார் மடம் பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு மக்கள், வடவனுார், நங்கிலிகொண்டானில் அப்பகுதி மக்கள், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், செஞ்சி - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.