உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பால பணி இறுதிக் கட்டமாக சாலை பணி தீவிரம்

எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பால பணி இறுதிக் கட்டமாக சாலை பணி தீவிரம்

விழுப்புரம்: விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பால பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சாலை போடும் பணி துவங்கியுள்ளது.விழுப்புரம் புறவழி சாலையில், கலெக்டர் வளாகம் பின்பகுதி அருகே எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சாலைகள் சந்திக்கிறது. இந்த பகுதியை அதிகளவிலான வாகனங்கள் கடப்பதால் விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த நான்கு வழிச்சாலை அமைத்ததில் இருந்து அந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்களும் கோரிக்கை வைத்தனர். இதையொட்டி, 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) நிதி ஒதுக்கியது. கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம், இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கியது.இங்கு, 690 மீட்டர் தொலைவுக்கு மேடான இணைப்பு சாலையும், சாலை சந்திக்கும் மையத்தில் தலா 28 மீட்டர் நீளம், அகலத்தில் கீழே வாகனங்கள் செல்லும் யு.வி.பி., கான்கிரீட் பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடந்தது.சென்னை மார்க்கத்தில் 300 மீட்டர் தொலைவுக்கு இணைப்பு சாலை அமைத்து, சைடு வால் கட்டி அதன் மேல் கிராவல் ஜல்லி கொட்டி நிரப்பி சாலை போடப்பட்டுள்ளது.திருச்சி மார்க்கத்தில் 400 மீட்டர் தொலைவிற்கு சைடு வால் கட்டி, அதன் மீது மண் நிரப்பி சமப்படுத்தும் பணிகள் நடந்தது. இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் வரும் ஏப்ரல் 17ம் தேதிக்குள் முடிந்து, 18ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக நகாய் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருந்தனர்.இதையொட்டி, தற்போது மேம்பாலம் மேற்புரத்தில் சாலை போடுவதற்கான பணிகள் துவங்கியுள்ளது. சாலை போடப்பட்டு, மேம்பாலம் இருபுற பக்கவாட்டில் உள்ள சில பணிகளை முடித்து அதிகாரிகள் கூறிய தேதியில் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீவிரமாக இறங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை