உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டா கத்தியை காட்டி மிரட்டி ஸ்கூட்டர், மொபைல்போன் பறிப்பு; செஞ்சி அருகே கொள்ளையர்கள் அட்டகாசம்

பட்டா கத்தியை காட்டி மிரட்டி ஸ்கூட்டர், மொபைல்போன் பறிப்பு; செஞ்சி அருகே கொள்ளையர்கள் அட்டகாசம்

செஞ்சி : செஞ்சி அருகே வாலிபரை பட்டா கத்தியை காட்டி மிரட்டி, ஸ்கூட்டர் மற்றும் மொபைல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தை ஒட்டி பெருவளூர், தேவேந்தவாடி கிராமங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் லோகநாதன், 45; தேசூர் சாலை ஏரிக்கு இயற்கை உபாதைக்காக தனது ஸ்கூட்டரில் சென்றார். அங்கிருந்து புறப்பட்டபோது, பின்தொடர்ந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள், லோகநாதனை ஸ்கூட்டரில் இருந்து கீழே தள்ளி வாயில் துணியை திணித்து, கழுத்தில் பட்டா கத்தியை வைத்து மிரட்டி மொபைல் போன், 150 ரூபாய் பணம், ஸ்கூட்டரை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.இது குறித்து வளத்தி போலீசில் லோகநாதன் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் சாலையில் இருந்த சி.சி.டிவி., கேமராக்களின் பின் பக்கமாக சென்று அதன் மீது துணியை கட்டி மூடி மறைத்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு, இதேபோல் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் பட்டாக்கத்தியுடன் வந்த நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர். கடந்த ஆறு மாதம் முன்பு பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்கணேஷ் மரக்கோணம் கிராமத்திற்கு சென்றபோது மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போனை பறித்து சென்றனர்.இரண்டு மாவட்ட போலீசாரிடமும் பட்டா கத்தி திருடர்கள் பிடிபடாமல் இருப்பதால் சுற்று வட்டார கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க இரண்டு மாவட்ட போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி