விழுப்புரத்தில் ரவுடிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்: 4 பேர் கைது
விழுப்புரம்; விழுப்புரத்தில் ரவுடிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் கே.கே.ரோடில் நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு கையில் கத்தி, தடி, கம்புகளுடன் பைக்கில் வந்த ரவுடி கும்பல் ஒன்று, மணி நகர் சந்திப்பில் இருந்த தள்ளுவண்டி கடை பெண்ணிடம் தகராறு செய்து அவரை தாக்கியதோடு, கடையையும் அடித்து நொறுக்கியது.இதனையடுத்து, முன் விரோதத்தால் மணி நகரை சேர்ந்த ஒரு வாலிபரையும், அவரது தந்தையையும் நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியது. அதனை தட்டிகேட்ட பொது மக்களையும் அந்த கும்பல் தாக்கியதோடு, அந்த வழியாக பைக்கில் வந்தவர்களையும் தாக்கி, இரண்டு பைக்குகளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிவிட்டனர்.தகவல் அறிந்த விழுப்புரம் ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா தலைமையிலான தாலுகா போலீசார் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மணி நகரைச் சேர்ந்த அய்யனாருக்கும்,28; வி.மருதூரை சேர்ந்த தீனா,25; பிரசன்னா,27; என்பவர்களுக்குமிடையே கோஷ்டி மோதலில் முன்விரோதம் இருந்துள்ளது. அய்யனாருக்கு, கே.கே.,ரோடை சேர்ந்த காத்தவராயன் மகன் சரத்குமார்,25; ஆதரவாக இருந்துள்ளார்.இதனால் தீனா, பிரசன்னா ஆகியோர், தனது நண்பர்களான விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஹேராம், மருதூரை சேர்ந்த சிலம்பரசன், சங்கர் மகன் விக்னேஷ், ராஜா மகன் விக்னேஷ் உள்ளிட்டோர் கும்பலாக சரத்குமார் வீட்டிற்கு சென்று தாக்கியுள்ளனர்.அதனை தடுக்க வந்த சரத்குமாரின் தந்தை காத்தவராயனை,70; கல்லால் தாக்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற மருதூரை சேர்ந்த கணேசன்,55; என்பவரையும் கல்லால் தாக்கியதோடு, அந்த பகுதி கடைகளை உடைத்து சேதப்படுத்தினர்.இது குறித்து சரத்குமார் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் தீனா உள்ளிட்ட 6 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். அதில், ஹேராம்,31; சிலம்பரசன்,23; சங்கர் மகன் விக்னேஷ்;25; ராஜா மகன் விக்னேஷ், 25; ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தீனா,24; பிரசன்னா,25; ஆகியோரை தேடி வருகின்றனர்.