| ADDED : ஆக 31, 2025 11:56 PM
திண்டிவனம் : பா.ம.க.,வில் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல், பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி, புதுச்சேரியில் ராமதாஸ் தலைமையில் கூடிய பா.ம.க., பொதுக்குழுவில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு, விளக்கம் அளிக்க, நேற்று வரை காலக்கெடு விதித்தும், அன்புமணி எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில், ராமதாஸ் தலைமையில் பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம், தைலாபுரத்தில் இன்று கூடுகிறது. அதில், அன்புமணியை பா.ம.க.,வில் இருந்து நீக்குவதா? அல்லது அவருக்கு வழங்கிய செயல் தலைவர் பதவியை பறிப்பதா என்பது குறித்த முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். தன் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை, பா.ம.க., நிர்வாகக் குழு உறுப்பினராக ராமதாஸ் ஏற்கனவே நியமித்துள்ள நிலையில், அன்புமணி நீக்கப்பட்டால், ஸ்ரீ காந்திமதிக்கு செயல் தலைவர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாகவும் பா.ம.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.