உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதையில் தாயை அடித்த தந்தையை கொன்ற மகன் கைது செஞ்சி அருகே பயங்கரம்

போதையில் தாயை அடித்த தந்தையை கொன்ற மகன் கைது செஞ்சி அருகே பயங்கரம்

செஞ்சி : செஞ்சி அருகே தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்சேவூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அப்பாதுரை, 65; இவரது மனைவி நீலாவதி, 60; ஆடு வளர்க்கும் தொழில் செய்து வந்தனர்.இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்து, 6 குழந்தைகள் இறந்து விட்டன. தற்போது இரண்டு மகள்களும், நாகராஜ், 28; என்ற மகனும் உள்ளனர். நாகராஜிக்கு திருமணமாகவில்லை. அவர், கடைசி பிள்ளை என்பதால் நீலாவதி அதிக செல்லம் கொடுத்து வளர்த்துள்ளார்.நாகராஜ் எப்போதாவது கூலி வேலைக்குச் செல்வார். மற்ற நாட்களில் தாய் நீலாவதியிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்தார். இதனால் நீலாவதி மீது நாகராஜ் அதிக பாசத்துடன் இருந்தார்.குடிப்பழக்கம் உள்ள அப்பாதுரை அடிக்கடி குடித்து விட்டு வந்து நீலாவதியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதை நாகராஜ் தட்டி கேட்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அப்பாதுரை, மனைவி நீலாவதியை கீழே தள்ளி தாக்கினார்.இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், வீட்டில் இருந்த கொடுவாளால் அப்பாதுரையின் தலையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அப்பாதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். தந்தை இறந்ததால் பயந்து போன நாகராஜ் அங்கிருந்து தப்பியோடினார்.நேற்று காலை தகவல் அறிந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பாதுரையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து நாகராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Radhakrishnan Seetharaman
ஏப் 13, 2025 10:07

திராவிட மாடல் ஆட்சியில் மாநிலத்தில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.


புதிய வீடியோ