சிறப்பு அரவை பருவம் கரும்பு பதிவு துவக்க முகாம்
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தடுத்தாட்கொண்டூர் மற்றும் சிறுமதுரை கிராமத்தில் சிறப்பு அரவைப் பருவ கரும்பு பதிவு துவக்கம் முகாம் நடந்தது. பெரியசேவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதியில் நடந்த முகாமில், கோட்ட கரும்பு அலுவலர் முருகேசன், நவீன கரும்பு சாகுபடி, பூச்சி நோய் தாக்குதல் கட்டுப்படுத்துதல், மகசூலை அதிகரிப்பது மற்றும் கரும்புக்கு வழங்கப்படும் அரசு மானியங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விவரித்தார். மேலும் கரும்பு சாகுபடியை அதிகப்படுத்தவும் நோய் தாக்காத ரகங்களை பயிர் செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். தற்போது கிரய தொகை 3,051 ரூபாய் மற்றும் ஊக்கத்தொகையாக 341 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. வரும் அரவை பருவத்திற்கு கரும்பு கிரய தொகையாக 4,000 ரூபாய் மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். கூட்டத்தில் கரும்பு பெருக்கு உதவியாளர் சிவநேசன், கரும்பு உதவியாளர் நேதாஜி, பிரபாகர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.