உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; விழுப்புரத்தில் தொடக்கம்

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; விழுப்புரத்தில் தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து மாவட்டத்தில், விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இத்திட்டம் நேற்று காலை துவங்கப்பட்டது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, லட்சுமணன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்து, பார்வையிட்டனர். இதில் தனித்தனி அரங்குகள் அமைத்து பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, காசநோய், இயன்முறை மருத்துவம், சித்தா மருத்துவம், உணவியல் ஆலோசனைகள் உள்ளிட்ட, 17 வகை மருத்துவ சிகிச்சைகளுக்கு, சிறப்பு நிபுணர்களால், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று துவங்கிய முகாம், தொடர்ந்து வரும் நவ., முதல் தேதி வரை, 13 வட்டாரங்களிலும் வாரத்திற்கு தலா 3 வீதம் மொத்தம், 39 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் முகாம் நடத்தப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதி மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டு, உடல் நலனை பாதுகாக்க கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ்பாபு, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, துணை இயக்குநர் சுதாகர், உணவுபாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் பிரியாபத்மாசினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை