விடுபட்ட மகளிர் உரிமை தொகை விரைந்து வழங்க நடவடிக்கை
விழுப்புரம்; மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்ட மகளிருக்கு, விரைந்து வழங்கப்படும் என்று லட்சுமணன் எம்.எல்.ஏ., தெரிவித்தார். விழுப்புரம் தொகுதி, காணை ஒன்றியம், தோகைப்பாடி கிராமத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., முகாமை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, மகளிர் வாழ்வாதாரம் மேம்பட விடியல் பயணம், உரிமை தொகை, சுய உதவிக்குழு கடனுதவிகள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது, அந்தந்த பகுதிகளுக்கே வந்து, குறைகள் தீர்க்க உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், இந்த முகாம்களில் மனு அளித்து பயன்பெறலாம். 45 நாட்களில் தீர்வு காணப்பட்டு, உதவி தொகை வழங்கப்படும். பிற அரசுத்துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாகவும் மனு அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், காணை ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், ராஜா, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், விழுப்புரம் தாசில்தார்கள் கனிமொழி, ஆதிசக்தி, ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.