மத்திய, மாநில அரசை கண்டித்து வரும் 9ம் தேதி வேலை நிறுத்தம்
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், மத்திய, மாநில அரசை கண்டித்து, 9ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:மத்திய அரசின் தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் 4 புதிய சட்டங்களை கண்டித்தும், அரசு துறையில் அவுட்சோர்சிங், தொகுப்பூதியம், மதிப்பூதிய நியமனங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி வரும் 9ம் தேதி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில் எங்கள் சங்கம் பங்கேற்கிறது.இதேபோல், தமிழக அரசை வலியுறுத்தியும் வேலை நிறுத்த போராட் டம் நடத்தப்படும். வேலை நிறுத்தத்தில் அரசு பணியாளர் சங்க கூட்டமைப்பு ஊழியர்கள் கலந்துகொள்வர். உள்ளாட்சி துறை, ரேஷன், டாஸ்மாக், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளின் 1 லட்சம் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன், இணை பொதுசெயலர் சிவக்குமார், மாநில பொருளாளர் ஜெயகணேஷ், மாநில செயலர் இளங்கோவன், மாவட்ட தலைவர் அன்பழகன், களப்பணியாளர் சங்கம் சிவக்கொழுந்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.