விழுப்புரத்தில் நீச்சல் விளையாட்டு பயிற்சி மையம் துவக்கம்! பெருந்திட்ட வளாக அரசு நீச்சல் குளத்தில் ஏற்பாடு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், விளையாட்டு துறை சார்பில், புதிதாக நீச்சல் விளையாட்டு பயிற்சி (நீச்சல் அகாடமி) மையம் துவங்கப்படுகிறது. தமிழக அரசு, விளையாட்டு மேம்பாட்டு துறை மூலம் அந்தந்த மாவட்டங்களில் பிரபலமாக உள்ள விளையாட்டுகளில், கூடுதல் கவனம் செலுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை, பல்வேறு உயரிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வைத்து, அதிக அளவில் வெற்றி பெற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், புதிதாக நீச்சல் விளையாட்டு பயிற்சி (நீச்சல் அகாடமி) மையத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில், நீச்சல் விளையாட்டு பயிற்சி மையத்தை ஏற்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த நீச்சல் அகடாமி பயிற்சி மையத்தில் (டே போர்டர் ஸ்கீம்) நீச்சல் பயிற்சி பெறுவதற்கு, 12 வயது முதல் 21 வயது வரை உள்ள 20 மாணவர்கள், 20 மாணவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், காலை மற்றும் மாலை நேரத்தில், மாதத்தில் 25 நாட்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தனி பயிற்சியாளரும் நியமிக்கப்பட உள்ளார். இந்த நீச்சல் பயிற்சி மையத்தில் சேர்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வு வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு, கலெக்டர் பெருந்திட்ட வளாக நீச்சல் குளத்தில் நடக்கிறது.இத்தேர்வில், நீச்சல் ஆர்வமுள்ள மாணவர்கள், உரிய ஆவனங்களுடன் பங்கேற்கலாம். மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 7401703485 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெற்றுக்கொள்ளலாம்.இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் தெரிவித்துள்ளார். கோடை நீச்சல் பயிற்சி
விழுப்புரம் அரசு நீச்சல் குளத்தில், கோடை காலத்தையொட்டி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டமும் உள்ளது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.நீச்சல் பயிற்சி திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதல் பேட்ச் பயிற்சி முடித்துள்ளனர். வரும் 15 முதல் 27ம் தேதி வரை 2வது பேட்ச் பயிற்சி நடக்க உள்ளது. தொடர்ந்து, 29 முதல் மே 11ம் தேதி வரையும், மே 13ம் தேதி முதல் மே 25 வரையும், மே 27 முதல் ஜூன் 8ம் தேதி வரை நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. பயிற்சி முகாமில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பள்ளி, கல்லுார் மாணவர்கள் பங்கேற்கலாம். பெண்களுக்கு தனியாக பயிற்சியளிக்கப்படுகிறது.தினசரி காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரையும், மாலை 3:00 முதல் 6:00 மணி வரையும் பயிற்சியளிக்கப்படும். நீச்சல் பயிற்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு 59 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 12 நாட்களுக்கு 1,770 ரூபாய் கட்டணமும், சான்றிதழ் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.