உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.8 கோடியில் கட்டிய கோலியனுாரான் வாய்க்கால்... வீண்: துார்வரும் பணிகள் தொய்வால் மக்கள் அவதி

ரூ.8 கோடியில் கட்டிய கோலியனுாரான் வாய்க்கால்... வீண்: துார்வரும் பணிகள் தொய்வால் மக்கள் அவதி

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கோலியனுாரான் வாய்க்கால் சரியாக துார்வாரப்படாததால், பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்து கொண்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. மழை காலம் நெருங்குவதற்குள் துார்வாரும் பணிகள் முற்றிலும் முடிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. விழுப்புரம் நகரில் உள்ள பெரிய வாய்க்கால்களில் செல்லும் கழிவுநீர், கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம், தாமரைக்குளத்தில் உள்ள வாய்க்கால்கள் வழியாக, சாலை அகரம், கோலியனுாரை சென்றடைகிறது. இந்த கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அடைத்து கொண்டு, கழிவுநீர் தேங்குவது தொடர்கதையானது. இதனால் விழுப்புரம் நகரில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, இரவில் கொசு தொல்லைகளில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மழைக்காலங்களில் இந்த வாய்க்காலில் கழிவுநீர் நிரம்பி, குடியிருப்புகளுக்கு முன் குளம் போல் தேங்கியதால், குழந்தைகள், முதியவர் உட்பட பலருக்கும் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டது. இதனால் விழுப்புரம் நகராட்சி, நபார்டு வங்கி உதவியோடு ரூ. 8 கோடி மதிப்பீட்டில் தெளிமேடு கிராமத்தில் இருந்து விழுப்புரம் வழியாக கோலியனுார் வரை, வாய்க்கால் சீரமைப்பு பணிகள் கடந்த 2017 ம் ஆண்டு துவங்கின. இதையொட்டி, தெளிமேடு கிராமத்தில் தலைப்பு மதகு உருவாக்கப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து பிரியும் தண்ணீர், அங்கு சேகரிக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறும் மாசுபடிந்த நீர் பிரிக்கப்பட்டு, கழிவுநீர் வாய்க்காலுக்கு அனுப்பும் பணி துவங்கியது. மேலும், கடந்த 2021 ம் ஆண்டு விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் பகுதியில் மற்றொரு தலைப்பு மதகு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கோலியனுாரான் வாய்க்கால் சீரைமப்பு பணிகள் கடந்த, 2022ம் ஆண்டு முற்றிலுமாக நிறைவு பெற்றன. இந்நிலையில் தற்போது பருவமழை காலம் துவங்கவுள்ள சூழலில், கோலியனுாரான் வாய்க்காலை நகராட்சி ஊழியர்கள் சரியாக துார்வாராததால் ஆங்காங்கே கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்து கொண்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுக்கும் வாய்ப்புள்ளதால், கோலியனுாரான் வாய்க்கால் மூலம் வெளியேறும் கழிவுநீர் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் அபாய நிலையுள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நகராட்சி நிர்வாகம் மூலம் கோலியனுாரான் வாய்க்கால் துார்வாரும் பணி ஆங்காங்கே தொய்வின்றி நடந்து வருகிறது. இதற்கிடையே பாதாள சாக்கடையில் அடைப்பு நீக்கத்தை சரிசெய்ய, நகராட்சி ஊழியர்கள் செல்வதால், வாய்க்கால் துார்வாரும் பணி பொறுமையாக நடக்கிறது. மழைக்காலம் வருவதற்குள் இந்த பணிகள் முற்றிலுமாக முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு பருவமழையின் போது, கோலியனுாரான் கால்வாய் நிரம்பி கழிவுநீர் பெருக்கெடுத்து குடியிருப்புகளை சூழ்ந்து, மக்கள் பெரிதும் வெளியேற வழியின்றி சிரமப்பட்டனர். இந்த நிலை, இந்தாண்டு ஏற்படாமல் இருக்க, வாய்க்காலை துரிதமாக நகராட்சி ஊழியர்கள் துார்வாரி, மக்கள் பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !