செய்தி சில வரிகளில்...
மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
திருவெண்ணெய்நல்லுாரில் அ.தி.மு.க., மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர் சரவணக்குமார் தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் அரங்கராஜன், ரகு, விருத்தாம்பாள், அறிவழகன் உட்பட 100க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி, அமைச்சர் பொன்முடி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி, அவை தலைவர் ஜெயச்சந்திரன், திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் உட்பட பலர் உடனிருந்தனர். பல் சுகாதார விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி பள்ளியில், இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் நடந்த பல் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் பாபு முன்னிலை வகித்தார். இந்திய பல் மருத்துவர் சங்க மாவட்ட தலைவர் கோபி, பற்கள் பராமரிப்பு குறித்து விளக்கினார். தொடர்ந்து பல் ஆரோக்கியம் தொடர்பாக உறுதிமொழி ஏற்று, மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தைகள் தின விழா
விழுப்புரம் அரசு உதவிபெறும் ஹாஜி மன்சூர்ஷா ஓரியண்டல் உயர்நிலை பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவிற்கு, தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ரவிக்குமார், சிவராமன் சிறப்புரையாற்றினர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகி ஜியாவுதீன் பரிசளித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பு கலை நிகழ்ச்சி
கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிக் பள்ளியில் நடந்த சிறப்பு கலை நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் தேன்மொழி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி அறங்காவலர் ராஜேந்திரன், கல்வியாளர் குமார் முன்னிலை வகித்தனர். மேனேஜர் மஞ்சுளா வரவேற்றார். பள்ளி முதல்வர் வாசுகி மேற்பார்வையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து விழுப்புரம் ராமகிருஷ்ணா மிஷன் செயலாளர் சுவாமி பரமசுகானந்தா கல்வியின் முக்கியம் குறித்தும் பேசினார். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாக்காளர் சிறப்பு முகாம்
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 18 வயது நிரம்பிய வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் இன்றும், நாளையும் மற்றும் 23, 24ம் தேதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடக்கிறது. பொது மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு உளுந்துார்பேட்டை தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு பள்ளியில் கல்வி விழிப்புணர்வு
விழுப்புரம் அடுத்த பில்லுார் அரசு தொடக்க பள்ளியில், குழந்தைகள் தினத்தை யொட்டி நடந்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, கண்காணிப்பு குழு உறுப்பினர் அகத்தியன் தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, பொது ஒழுக்கங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி தலைமை ஆசிரியை இளையராணி உட்பட பலர் பங்கேற்றனர். குழந்தைகள் தின விழா
செஞ்சி அடுத்த பழவலம் அரசு துவக்க பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் பூங்காவனம் ராமசாமி, ஊராட்சி தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வள்ளி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., சிறுவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மாவட்ட பிரதிநிதி கதிரவன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு பிரசாரம்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் புகைப்படக் கண்காட்சி நடந்தது. கலெக்டர் பழனி விழிப்புணர்வு பிரசார மின்னணு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டு 'போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக மின்னணு திரை வாகனம், மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லுாரி இடங்களில் குறும்படங்களை திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும்' என்றார். எஸ்.பி., தீபக் சிவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பங்கேற்றனர். தெருவிளக்குகள்: கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் பாண்டியன் நகரில் தெருவிளக்கு கணக்கெடுக்கும் பணியை, கலெக்டர் பழனி ஆய்வு செய்தார். தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் தெருமின் விளக்கு நல்ல நிலையில் உள்ளதா. தினந்தோறும் உரிய நேரத்தில் எரிகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மோகன், நகராட்சி உதவி பொறியாளர் ராபர்ட் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர். விழிப்புணர்வு நடைபயணம்
விழுப்புரத்தில் உலக குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகளுக்கான பிரச்னை தடுப்பு தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு நடைபயணத்தை கலெக்டர் பழனி துவக்கி வைத்தார். அரசு சட்டக்கல்லுாரி, தனியார் கல்லுாரி மாணவர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்றனர். நடைபயணத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். எஸ்.பி., தீபக்சிவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, சி.இ.ஓ., அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பாராட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி புத்தாக்க மேம்பாடு திட்டத்தில் பங்கேற்று சேஷசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், இளவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் பெற்றது. வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள் கலெக்டர் பிரசாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சி.இ.ஓ., கார்த்திகா உடனிருந்தார். அகவல் பாராயணம்
கண்டாச்சிபுரம் சத்சங்கத்தில் பவுர்ணமியையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து சத்சங்க நிர்வாகி வசந்தராயன் தலைமையில் ஓதுவார்கள் அகவல் பாராயணம் செய்தனர். மதியம் 12:00 மணிக்கு திரைநீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.