சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால் சடலத்தை நீரில் சுமந்து செல்லும் அவலம்
விழுப்புரம்,; விழுப்புரம் அருகே சுடுகாட்டிற்கு பாதையில்லாததால் இறந்தவரின் சடலத்தை பொதுமக்கள் ஆற்று தண்ணீரில் சுமந்து சென்றனர்.விழுப்புரம் அருகே பில்லுார் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிலிங்கம். சப்-இன்ஸ்பெக்டர். இவர், நேற்று முன்தினம் காலை 5.00 மணிக்கு உடல் நலக்குறைவால் இறந்தார். இவரின் இறுதி ஊர்வலம் அன்று மாலை 4.00 மணிக்கு அதே பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு குடும்பத்தார், உறவினர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த சுடுகாட்டிற்கு பாதையில்லாததால், மலட்டாற்றில் அரை கி.மீ., துாரம் தண்ணீரில் சடலத்தை உறவினர்கள் சுமந்து சென்றனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும் தருணங்களில் இங்குள்ள பொதுமக்கள் யாராவது இறந்தால் பல கி.மீ., துாரம் சுற்றி கொண்டு செல்லும் நிலையுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை யொட்டி, சுடுகாட்டிற்கு முறையான பாதையை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.