நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டும் அவலம்
விழுப்புரம்: வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் அடுத்த கோலியனுார் வழியாக வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை வழியாக கும்பகோணம், தஞ்சாவூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கோலியனுார் கூட்ரோடு அருகே சென்னை விக்கிரவாண்டி மார்க்கத்தில் சாலையோரத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதேபோன்று, விழுப்புரம், ஜானகிபுரம் ரவுண்டானா மேம்பாலம் வழியாக சென்னை - திருச்சி மற்றும் விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த மேம்பாலத்தின் கீழ் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் சர்வீஸ் சாலையோரத்தில் கடந்த சில தினங்களாக குப்பைகள் மற்றும் லாரிகள் மூலம் கழிவுநீர் கொட்டப்படுகிறது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பிரதான சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.