கிராமங்களில் வி.ஏ.ஓ.,க்கள் இருப்பதில்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு
திண்டிவனம்: வி.ஏ.ஓ.,க்கள், கிராமங்களில் தங்கி பணி செய்யாமல் உள்ளதாக, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர். திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், சப் கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் தொடர் மழை பெய்தும், ஏரிகள் நிரம்பவில்லை. பல விவசாய சாலைகளில் ஆக்கிரமிப்பால், விளை பொருள்களை வெளியே கொண்டு வர முடியவில்லை. அதனை சீரமைக்க வேண்டும், கால்நடை மருத்துவ முகாமில் ஆடு, மாடுகளுக்கு மட்டுமே சிகிச்சை வழங்கப்படுகிறது. குறிப்பாக, நாட்டுக்கோழிகள் மழைக்காலங்களில் நோய் தாக்கி உயிரிழக்கும் நிலையுள்ளதால், கோழிகளுக்கும் உரிய தடுப்பு மருந்து அளிக்க வேண்டும். காராமணி பயிரிடும் போது, பூச்சு தாக்குதல் ஏற்படுவதை தடுக்க வேண்டும். ஒலக்கூர் அருகே சேதமடைந்த ஏரி வாய்க்கால் தடுப்பணையை சீரமைக்க கோரி மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. நெடி மொழியனுார் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றாததால், ஏரி நிரம்பவில்லை. பிரம்மதேசம் கூட்டுறவு வங்கி நீண்டகாலமாக இயங்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர். திண்டிவனம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள நடைபாதை சேதமடைந்துள்ளது. நடைபாதைகளில் கடைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அங்கு நகரும் படிக்கட்டுகள் (எக்ஸ்லேட்டர்) அமைக்க வேண்டும். திண்டிவனம் உழவர் சந்தையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என 3 மாதங்களாக வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. வி.ஏ.ஓ.,க்கள், கிராமங்களில் தங்கி பணி செய்ய வேண்டும் என அரசு உத்தரவு இருந்தும், அவர்கள் கிராமங்களில் இருப்பதில்லை. குறைந்தபட்சம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையாவது இருக்க வேண்டும். அலுவலக வாசலில் தகவல் பலகை வைத்து, வி.ஏ.ஓ., பணி விபரங்களை அதில் பதிவிட வேண்டும். அவர்கள் பணிக்கு வருவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். விதை நெல் தட்டுப்பாடு உள்ளது. அவுரி விதைகள் ஓராண்டாக கிடைப்பதில்லை. தொடர் மழையால் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த 'பெஞ்சல்' புயலின்போது பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன், நகை கடன் வழங்காமல் அலைகழிக்கின்றனர். இவ்வாறு விவசாயிகள் பேசினர். இதற்கு பதிலளித்த சப் கலெக்டர் ஆகாஷ், 'இக்கூட்டத்திற்கு, துறை சார்ந்த அலுவலர்கள், மாறி, மாறி வருவதால் பிரச்னை தெரியாமல் விழிக்கின்றனர். இனி விவரம் அறிந்தவர்கள் வர வேண்டும். இரு வாரங்களுக்குள் உழவர் சந்தை பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதர குறைகள் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.