பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை; விவசாயிகள் வேதனை
விழுப்புரம் மாவட்டம், அதிக கிராமங்களை கொண்டது விவசாயத்தை நம்பி விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும், அதனை சார்ந்த வியாபாரிகளும் உள்ளனர். இதனால், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.ஆனால், சமீப காலமாக வேளாண் சார்ந்த குறைகள் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கடந்த மாதம், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடத்தவில்லை என, விவசாய சங்க பிரதிநிதிகள் மறியலில் ஈடுபட்டபோது, ஜமாபந்தி நடப்பதால் கூட்டத்தை நடத்தவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். ஆனால், பிற மாவட்டங்களில் குறைகேட்பு கூட்டமும், ஜமாபந்தியும் நடந்துள்ளது.சமீபத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், வெள்ள பாதிப்புக்கு காப்பீடு நிவாரணம் வழங்கவில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடுக்கப்பட்ட நெல்லுக்கு பணம் வழங்கவில்லை என தர்ணாவில் ஈடுபட்டனர். அதற்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.இதுகுறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'பெஞ்சல் புயல் காரணமாக ஏரி, ஆற்றங்கரைகள் உடைந்தது. மழைக்காலம் துவங்கும் முன் ஏரி, குளங்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. வரும் வடகிழக்கு பருவமழையால் மீண்டும் பெருத்த சேதம் ஏற்படும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.ஏரி, நீர்நிலை வாய்க்கால்களில், பல இடங்களில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சாலை போடுகின்றனர். ஊரக வளர்ச்சி கூடுதல் கலெக்டரும், கூட்டத்திற்கு வருவதில்லை. வேளாண் சார்ந்த புகார்கள் மீது, உயரதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்காததால், பிரச்னைகள் தொடர்கிறது' என்றனர்.