அச்சுறுத்தும் வேகத்தடைகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி
விழுப்புரம்: விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் அச்சுறுத்தும் வேகத் தடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.விழுப்புரத்தில் முக்கிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி கிராமப்புறச் சாலைகள், நகர்ப்புறங்களில் உள்ள சிறிய குடியிருப்பு சாலைகள் என எல்லாவற்றிலும், பல இடங்களில் விதிமீறி வேகத்தடை அமைக்கப்படுகிறது.குறிப்பாக விழுப்புரம் நகரில் அனைத்து வார்டுகளிலும், சிமென்ட், தார் சாலை போடப்பட்டு வருகிறது. இந்த இடங்களில், அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், அவரவர் விருப்பப்படி சாலை போடுபவர்களை மிரட்டி வேகத்தடை அமைக்க வைக்கின்றனர்.பிரதான நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்கப்படுகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் தவிர்த்து, கிராம சாலைகள், தெருக்களில் கூட பல இடங்களில் வேகத்தடை அமைக்கப்படுகிறது.அவ்வாறு அமைக்கப்படும் வேகத்தடை விதிமீறி, சகட்டு மேனிக்கு அமைக்கின்றனர். மேலும், எச்சரிக்கை வர்ணம் பூசுவதும் இல்லை, இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. பஸ், லாரி, வேன், கார், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இந்த வேகத்தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விதிமீறிய வேகத் தடைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.