ரயில் நிலையத்திற்கு சுற்றி சுவர் திண்டிவனம் மக்கள் எதிர்ப்பு
திண்டிவனம் : திண்டிவனம் ரயில் நிலைய பிளாட்பாரத்தையொட்டி, சுற்றுச்சுவர் எழுப்புவதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திண்டிவனம், ரயில் நிலையம் நகரின் மையப்பகுதியில் இருப்பதால், பொதுமக்கள் ரயில் நிலையம் வழியாக நகர பகுதிக்கு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இதில் காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள ரயில்வே தரை பாலத்திற்கு அருகே பொது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ரயில் நிலையத்திற்கு வரும் வழியை, சமீபத்தில் பாதுகாப்பு கருதி, ரயில்வே நிர்வாகம் சுற்றுச்சுவர் எழுப்பியது.இதேபோன்று, ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் திறந்த வெளியாக இருந்த இடத்தில் வெளியாட்கள் உள்ளே நுழையாதபடி சுற்றுச்சுவர் எழுப்பும் பணியை சில நாட்களுக்கு முன் துவங்கினர்.இதற்கு ரயில் நிலையத்தையொட்டியுள்ள காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், எதிர்ப்பு தெரிவித்தனர்.நீண்ட காலமாக மக்கள் பயன்படுத்திய வழியில் சுற்றுச்சுவர் எழுப்பக் கூடாது என்றும், சுவர் எழுப்பும் போது அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் வருவதற்கு சிறிய வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று ரயில்வே துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். பிரச்னை காரணமாக சுவர் எழுப்பும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.தற்போது மீண்டும் சுவர் எழுப்பும் பணி துவங்கியுள்ளது. இதுபற்றி ரயில்வே போலீசார் தரப்பில் கூறுகையில், 'ரயில் நிலையத்தை சுற்றியுள்ள இடங்கள் திறந்த வெளியாக இருப்பதால் கால்நடைகள் அதிகளவில் ரயில் நிலையத்தின் உள்ளே வருகிறது. இதனால் ரயில்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.மேலும், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், பாதுகாப்பு கருத்தில் கொண்டு சுற்றுச்சுவர் எழுப்பும் பணி நடக்கிறது' என்றனர்.