உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கெங்கராம்பாளையம் டோல்கேட்டில் 3ம் தேதி முதல் சுங்க கட்டணம் வசூல்

கெங்கராம்பாளையம் டோல்கேட்டில் 3ம் தேதி முதல் சுங்க கட்டணம் வசூல்

விழுப்புரம் : விழுப்புரம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலையில், கெங்கராம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி டோல்கேட் 3ம் தேதி முதல் திறக்கப்பட்டு, சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 186 கி.மீ., தொலைவிற்கு, நான்குவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், முதல் கட்டமாக விழுப்புரம் - புதுச்சேரி வரை 29 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலை பணி முடிக்கப்பட்டு, தற்காலிக பயன்பாட்டில் உள்ளது.இதில் சாலை மற்றும் மேம்பாலங்களில் ஆங்காங்கே ஏற்பட்ட விரிசல்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. நுாறு சதவீதம் பணிகள் முடிவடையவில்லை.இச்சாலையில் விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 3ம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. சுங்க கட்டண விபரம்: l கார், ஜீப், வேன் உள்ளிட்ட இரு அச்சு இலகு ரக வாகனங்களுக்கு ஒருமுறை பயணத்திற்கு ரூ.60, இருமுறை பயணத்திற்கு ரூ.90, மாத பாஸ் கட்டணம் ரூ.1985, மாவட்டத்திற்குள் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ஒரு முறைக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படும்.l இலகு ரக வணிக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் மினி பஸ்களுக்கு, ஒருமுறை கட்டணம் ரூ.95, இருமுறை கட்டணம் ரூ.145, மாதாந்திர பாஸ் ரூ.3210, மாவட்டத்திற்குள் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.l பஸ்கள், லாரிகள், ட்ரக்குகளுக்கு ஒரு முறை கட்டணம் ரூ.200, இருமுறை கட்டணம் ரூ.305, மாதாந்திர பாஸ் ரூ.6,725, மாவட்டத்திற்குள் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ரூ.100 வசூலிக்கப்படும்.l மூன்று அச்சுகள் கொண்ட டாரஸ் லாரிகள், கனரக வாகனங்களுக்கு ஒரு முறை கட்டணம் ரூ.220, இருமுறை கட்டணம் ரூ.330, மாதாந்திர பாஸ் ரூ.7,335, மாவட்டத்திற்குள் வணிகப் பதிவு வாகனங்கள் ரூ.110 செலுத்த வேண்டும்.l பல அச்சுகள் கொண்ட கனரக வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூ.315, இருவழி கட்டணம் ரூ.475, மாதாந்திர பாஸ் ரூ.10,545, மாவட்டத்திற்குள் பதிவு செய்த வாகனங்களுக்கு ரூ.160 வசூலிக்கப்படும். l மிகப்பெரிய 7க்கும் மேற்பட்ட அச்சு வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூ.385, இருமுறை கட்டணம் ரூ.580, மாதாந்திர பாஸ் ரூ.12,835 ஆகும். l வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் (20 கி.மீ. சுற்றளவுக்குள்) ரூ.340 வசூலிக்கப்படும். மாதாந்திர பாஸ் தேவைப்படுவோர் டோல்கேட்டில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

ஆளில்லா தானியங்கி வசூல் மையம்...

கெங்கராம்பாளையம் டோல்கேட், இடவசதியின்மை காரணமாக, இரண்டு மார்க்க வசூல் மையங்களும் 500 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. வலது, இடது என இரு மார்க்கங்களிலும் தலா 8 வழிகள் (லேன்கள்) உள்ளன. அனைத்து லேன்களும் ஆட்களின்றி தானியங்கி வசூலிப்பு மையமாக அமைக்கப் பட்டுள்ளன.முழுவதும் 'பாஸ்டேக்' முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. பாஸ்டாக் இன்றி கடந்தால், இரு மடங்கு அபராதம் வசூலிக்கப்படும். இரு மார்க்கத்திலும் தலா ஒரு (லேன்) வழியில் மட்டும் பூத் அமைத்து, சுங்க கட்டணம் வசூலிக்க ஊழியர் நியமிக்கப்படுவர். டோல்கேட்டில் வாகன எடை மேடை, பொது கழிப்பிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எடுபடாமல் போன எதிர்ப்பு..

விழுப்புரம், புதுச்சேரி மக்களின் சாலை பயன்பாட்டில், 10 கி.மீ., தொடக்க பகுதியிலேயே டோல்கேட் அமைப்பதும், மொத்தம் 29 கி.மீ., பயன்பாட்டிற்கு கட்டணம் வசூலிப்பதும் விதிமீறல் எனவும், விவசாய விளைபொருள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் எனவும், திட்டத்தின் தொடக்கத்திலேயே விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினர். ஆனாலும், 100 சதவீதம் பணிகள் முடிந்து சாலை திறக்காத நிலையில், டோல்கேட் பயன்பாட்டுக்கு வர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி