சென்னை சென்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: விழுப்புரம் புறவழிச்சாலையில் மக்கள் அவதி
விழுப்புரம்: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, நேற்று வட, தென் மாவட்ட வாகனங்கள் சென்னை நோக்கி அதிகளவில் சென்றதால், விழுப்புரம் புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தமிழகத்தில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை விடப்பட்டதால், கடந்த அக்டோபர் 28ம் தேதி முதல் சென்னை மார்க்கத்திலிருந்து, வட, தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பொது மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,170 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதில், தீபாவளி பண்டிகையான அக்டோபர் 31ம் தேதி வரை, சென்னையிலிருந்து வட, தென் மாவட்டங்களுக்கு 6 லட்சம் பேர் வரை பயணித்திருந்தனர்.இந்நிலையில், தொடர் விடுமுறை முடிந்து, நேற்று காலை முதல் மீண்டும் சொந்த ஊர்களிலிருந்து, சென்னை நோக்கி பொது மக்கள், அலுவலர்கள், மாணவர்கள் புறப்பட்டனர்.நெல்லை, மதுரை மற்றும் கோவை, சேலம் மார்க்கங்களிலிருந்து, திருச்சி, கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை வழியாக ஏராளமான அரசு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் கார்கள், வேன்கள் நேற்று காலை 8:00 மணி முதல் சென்னைக்கு வரிசையாக செல்லத் தொடங்கின.தொடர்ந்து மதியம் வரை வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. பிற்பகல் 3:00 மணிக்கு பிறகு, வாகனங்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்தது. ஒரே மார்க்கத்தில் இரண்டு வரிசையாக போட்டி போட்டு வாகனங்கள் சென்றதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர்.இதனால், விழுப்புரம் புறவழிச்சாலையில் ஜானகிபுரம் தொடங்கி முத்தாம்பாளையம் சந்திப்பு வரை தொடர்ச்சியாக வாகனங்கள், குறிப்பாக கார்கள் பன் மடங்கு அணி வகுத்துச் சென்றன.விழுப்புரத்தில் எல்லீஸ்சத்திரம் பைபாஸ் சந்திப்பில், பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அந்த குறுகிய சர்வீஸ் சாலையில் தொடர்ச்சியாக 3 கி.மீ. தொலைவுக்கு வரிசையாக வாகனங்கள் இடைவெளியின்றி சென்றன.இதனால், பாலம் சந்திப்பு இடத்தில், விழுப்புரத்திலிருந்து ஏனாதிமங்கலம், திருவெண்ணெய்நல்லுார் மார்க்கத்தில் குறுக்கே வாகனங்கள் கடந்த செல்ல முடியாமல் தவித்து நின்று, நீண்ட நேரம் காத்திருந்து சென்றனர்.தொடர்ந்து, மாலை 5:00 மணி முதல் விழுப்புரம் பைபாசில் சென்னை மார்க்கத்தில் வாகனங்கள் அதிகரித்து, 4 கி.மீ. தொலைவுக்கு ஊர்ந்து சென்றதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.விழுப்புரத்திலிருந்து, சென்னை நெடுஞ்சாலைக்குள் திரும்பிச் செல்லும் வாகன ஓட்டிகள், நீண்ட நேரம் காத்திருந்து சென்றனர். திண்டிவனம்
விழுப்புரம் மார்க்கம், புதுச்சேரி மார்க்கம் மற்றும் திருவண்ணாமலை மார்க்கத்திலிருந்து நுாற்றுக்கணக்கான வாகனங்கள் திண்டிவனம் பகுதியை கடந்த சென்றன.இதில் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் மட்டுமல்லாமல், போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தனியார் பஸ்களும் அதிகளவில் சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றன.இதனால் திண்டிவனம் ஜக்காம்பேட்டை சந்திப்பு, சலாவதி கூட்ரோடு, திண்டிவனம் மேம்பாலம் சந்திப்பு, ஆர்யாஸ் ஓட்டல் சந்திப்பு என அனைத்து இடங்களிலும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து, திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதி உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியில், டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ் மேற்பார்வையில் கூடுதல் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.