உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து டீக்கடைக்காரர் படுகாயம்

டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து டீக்கடைக்காரர் படுகாயம்

வானுார்: வானுார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து டீக்கடை உரிமையாளர் படுகாயம் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, வி.கேணிப்பட்டு, மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 53; இவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே, திண்டிவனம்-புதுச்சேரி சாலையில், சப்தகிரி நகர் பகுதியில் கடந்த இரு ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல், கடையை திறந்து வியாபாரம் செய்தார். இந்த டீக்கடை எதிரே, மின்துறைக்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் ஒன்று, உயர் மின்னழுத்தம் காரணமாக காலை 11:45 மணிக்கு, திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் டிரான்ஸ்பார்மரின் உள்ளே இருந்த கொதிக்கும் ஆயில் 30 அடி துாரத்தில் டீ கடை மீது சிதறியது. இதில் கடையில் இருந்த நாகராஜன் மீது கொதிக்கும் ஆயில் தெறித்தது. அப்போது டீக்கடை சிலிண்டர் அடுப்பும் எரிந்துகொண்டிருந்ததால், அதுவும் பட்டு நாகராஜ் மேலிருந்த ஆயில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீப்பற்றியது. தகவலறிந்த ஆரோவில் போலீசார், தீயில் பாதிக்கப்பட்ட நாகராஜனை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி