யானை தந்த பொம்மைகள் விற்ற வழக்கு; திருச்சி எஸ்.ஐ., உட்பட 2 பேர் கைது
விழுப்புரம் : விழுப்புரத்தில் யானை தந்தத்தில் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய, எஸ்.ஐ., உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.யானை தந்தத்தில் செய்யப்பட்ட பொம்மைகளை, ஒரு கும்பல் விழுப்புரத்தில் விற்பனை செய்ய வந்திருப்பதாக கடந்த நவம்பர் 11ம் தேதி விழுப்புரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதன் பேரில், வனத்துறையினர் சென்று யானை தந்தம் மூலம் செய்யப்பட்ட 4 பொம்மை களை விற்பனை செய்ய முயன்றதாக, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் விஸ்வநாதன் மனைவி ஈஸ்வரி, 50; கருப்புசாமி, 24; அறந்தாங்கி ஜஸ்டிஸ், 46; பாபாநாசம் முகமது ஜியாவுதீன், 50; ராஜ்குமார், 56; ராஜா, 38; பிரபாகரன், 36; சுப்ரமணியன், 37; தஞ்சாவூர், சீனிவாசபுரம் பைசல், 50; சேலம் பார்த்தசாரதி, 42; பல்லடம் பாலமுருகன், 48; திருச்சி பேட்டைவாய்கால் கார்த்திகேயன், 49; ஆகிய 12 பேரை கைது செய்தனர்.இது பற்றி, வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.கடத்தலில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதை யொட்டி, கைதான ஈஸ்வரி, ஜியாவுதீன், ஜஸ்டிஸ் ஆகியோரை கடந்த மாதம் 29ம் தேதி வனத்துறை அதிகாரிகள் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.அப்போது, யானை தந்தம் மூலம் தயாரான பொம்மைகள் விற்ற சம்பவத்தில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் மணிவண்ணன், 50; என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.இவர், யானை தந்தம் மூலம் தயாரான பொம்மைகளை தனது உறவினர் திருச்சி, அக்கரைபட்டி யை சேர்ந்த பாஸ்கரன், 53; என்பவரிடம் இருந்து பெற்று ஈஸ்வரி, ஜியாவுதீன் மூலம் சட்டவிரோதமாக விற்றுள்ளது தெரியவந்தது.இதையடுத்து, விழுப்புரம் வனத்துறை அதிகாரிகள், திருச்சி மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், துறை ரீதியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இந்த வழக்கில் 13வது குற்றவாளியாக சப் இன்ஸ்பெக்டர் மணி வண்ணனை வனத்துறை அதிகரிகள், சேர்த்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு விழுப்புரம் வனச்சரக அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி, மணிவண்ணன் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு விழுப்புரம் வனத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.அதனைத்தொடர்ந்து, மணிவண்ணன், பாஸ்கரன் ஆகியோர் நேற்று முன்தினம் விழுப்புரம் வனச்சரக அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார்.இருவரிடமும் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான வனத்துறையினர், விசாரணை நடத்தினர்.அதில், யானை தந்தம் மூலம் செய்த பொம்மை கள் விற்பனை சம்பவத்தில் இருவருக்கும் தொடர்பு இருப்பது உறுதியானதால் இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.பின், விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.