விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை தீவிரம்! பெஞ்சல் புயலால் விளைச்சல் பாதிப்பு
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கலுக்கான மஞ்சள் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. பொங்கல் கொண்டாட்டத்திற்கும், இயற்கையை வழிபடும் விவசாயிகள், பொங்கல் பொருள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையில், பொங்கல் பானைகளில் கட்டப்படும் மஞ்சள் கொத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது. விழுப்புரம் அருகே நன்னாடு, பாளையம், ஆலாத்தூர், விராட்டிக்குப்பம் பகுதிகளில் அதிகளவில் ஆண்டு தோறும் மஞ்சள் பயிரிட்டு வருகின்றனர். ஆனால், இந்தாண்டு ஏற்பட்ட பெஞ்சல் புயல் வெள்ளத்தின்போது, அந்த பகுதியில் பயிரிட்டிருந்த மஞ்சள் பயிர்கள் வெள்ளத்தில் முழுவதும் சேதமடைந்து போனது.இதே போல், விழுப்புரம் அருகே பனையபுரம், கொடுக்கூர், சித்தலம்பட்டு, கூனிச்சம்பட்டு பகுதிகளில் ஆண்டு தோறும் விவசாயிகள் பலர் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். இந்தாண்டும் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். கடந்த ஜூலை மாத காலத்தில் நடவு செய்து, தற்போது வளர்ந்து ஜனவரி மாதத்தில் அறுவடைக்கு தயாராகி உள்ளது.சித்தலம்பட்டு, கொடுக்கூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று மஞ்சள் அறுவடை நடந்தது. செழித்து வளர்ந்துள்ள மஞ்சள் பயிரை, மஞ்சள் கிழங்குகளுடன் வேறோடு பிடிங்கி எடுத்து, கட்டு கட்டாக கட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர். 10 கொத்துகள் கொண்ட மஞ்சள் கிழங்குகள் ரூ.150க்கு விவசாயிகள் கொடுக்கின்றனர். தோட்டங்களில் அதனை வாங்கும் சிறு வியாபாரிகள், மார்க்கெட்டுகளுக்கு வந்து விற்பனைக்கு வழங்குவர். இங்கிருந்து விழுப்புரம், புதுச்சேரி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் கொத்துகள் விற்பனைக்கு செல்கிறது.விழுப்புரம் வட்டாரத்தில் ஆண்டு தோறும் மஞ்சள் பயிரிடும் பரப்பு குறைந்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் தினத்தில், இந்த கொத்து மஞ்சள் விற்பனை செய்யப்படுகிறது. சில நேரங்களில் விற்காமல் தேங்குவதால், வீணாகிறது. அதிக செலவின் காரணமாக, ஈரோடு பகுதியை போன்று, உலர்த்தி மஞ்சளாக எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாமல் போகிறது. இந்தாண்டு பெஞ்சல் புயலின்போது, விழுப்புரம் பகுதியில் மஞ்சள் பயிர் சேதமடைந்துவிட்டதாலும், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி வரும் காலங்களில், வேளாண்துறையினர் மஞ்சள் பயிரிடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு மானிய இடுபொருள் போன்ற உதவிகள் செய்தும், விற்பனைக்கும் வழிகாட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.