இரண்டு அரசு பஸ்கள், கார் அடுத்தடுத்து மோதல் திண்டிவனம் அருகே போக்குவரத்து பாதிப்பு
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கார் மற்றும் அரசு பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் நித்தியானந்தன், 29; இவர் சென்னையிலிருந்து காரில் குடும்பத்தினருடன் நேற்று காலை சத்தியமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார். நேற்று காலை 10:௦௦ மணியளவில், திண்டிவனம்-சென்னை சாலையிலுள்ள சலவாதி அருகே கார் வந்த போது, முன்னால், சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சின் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டதால், பின்னால் வந்த நித்தியானந்தன் காரின் வேகத்தை குறைத்த போது, பின்னால் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு அரசு பஸ்காரின் பின் பக்கத்தில் வேகமாக மோதியதால், கார் முன்னால் இருந்த அரசு பஸ்சின் பின்பக்கம் சொருகிக்கொண்டது. இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இதே போல் இரண்டு பஸ்களில் வந்த சில பயணிகளுக்கு மட்டும் லேசான காயமேற்பட்டது. விபத்து காரணமாக, திண்டிவனம்-சென்னை சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .விபத்தில் சிக்கிய பஸ்சில் வந்த பயணிகள், அந்த வழியாக வந்த அரசு பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்து தொடர்பாக ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.