உங்களுடன் ஸ்டாலின் முகாமில் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
மயிலம்:திண்டிவனத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், பட்டா மாற்றத்திற்கு, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் புன்னைவனம், 47; விழுப்புரம் மாவட்டம், தென்பசியார் கிராம நிர்வாக அலுவலர். இவரிடம், திருவண்ணாமலை மாவட்டம், எச்சூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன், 35, என்பவர், தென்பசியார் கிராமத்தில் உள்ள வீட்டு மனைக்கு, பட்டா மாற்றம் செய்ய மனு கொடுத்தார். இந்நிலையில், திண்டிவனத்தில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. அங்கு பணியில் இருந்த புன்னைவனம், பட்டா மாற்றத்திற்காக வந்திருந்த நாராயணனை, டீக்கடைக்கு வருமாறு அழைத்து, அவரிடம், 3,000 ரூபாய் லஞ்சமாக கேட்டு பெற்றார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், புன்னைவனத்தை கையும், களவுமாக கைது செய்து விசாரிக்கின்றனர்.