உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

தி.மு.க., கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்

திண்டிவனம்; திண்டிவனத்தில் வி.ஏ.ஓ.,வை தாக்கிய தி.மு.க., கவுன்சிலரை கைது செய்யக்கோரி, வி.ஏ.ஓ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி 28வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சந்திரன். இவர், தனது வார்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமண சான்றிதழ் பெற, திண்டிவனம் நகர வி.ஏ.ஓ., சிற்றரசுவிடம் பேசினார். நேற்று காலை 10:00 மணிக்கு தனது அலுவலகத்திற்கு வருமாறு வி.ஏ.ஓ., கூறியதால், கவுன்சிலர் சந்திரன் சென்றார்.ஆனால் அலுவலகத்தில் வி.ஏ.ஓ., இல்லை. 12:00 மணிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கவுன்சிலர் சந்திரன் ஆதரவாளர்கள் சிலர் வி.ஏ.ஓ., சிற்றரசுவை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த அவர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இதுகுறித்து டவுன் போலீசில் வி.ஏ.ஓ., புகார் அளித்தார். இதனிடையே, வி.ஏ.ஓ., தன்னை திட்டியதாக, கவுன்சிலர் சந்திரன் டவுன் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை 5:45 மணிக்கு, வி.ஏ.ஓ., சிற்றரசுவை தாக்கிய கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி, தாலுகா அலுவலகம் முன்பு, கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் செல்வம், சுதாகர், ராம்குமார் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். டவுன் சப் இன்ஸ்பெக்டர் செல்வதுரை பேச்சுவார்த்தை நடத்தினார். கவுன்சிலர் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும், அதுவரை போராட்டம் தொடரும் என்று கூறி நேற்று இரவு 8:00 மணி வரை போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, கவுன்சிலர் சந்திரன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, சஞ்சிவராயன்பேட்டை மணிகண்டன், கார்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர். அதன்பிறகு, வி.ஏ.ஓ.க்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஏப் 30, 2025 11:48

ஒரு கவுன்சிலர் மற்றவரை தாக்க கூட உரிமை இல்லையா


Yes your honor
ஏப் 30, 2025 10:45

ஒரு சாதாரண வார்டு கவுன்சிலரைக் கூட கைதுசெய்ய தைரியமில்லாதவர்களா நம் சோ கால்ட்டு ஸ்காட்லாந்த்து போலீசார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை