தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு டேமேஜ் ; புழுதியில் செல்லும் வாகனங்கள்
விழுப்புரம் : சென்னை தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - எல்லீஸ்சத்திரம் சர்வீஸ் சாலை மழையால் சேதமாகி புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.உளுந்துார்பேட்டை - சென்னை தேசிய நெடுஞ்சாலை வாகன போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சமீபத்தில் அரசூர் அருகே கனமழையால் ஆற்றில் வெள்ளம் வந்ததையொட்டி, சாலையை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.இதனால், இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்சி, சென்னை மார்க்கங்கள் வழியாக பயணிக்கும் பயணிகள், பொதுமக்கள் பலரும் சிரமப்பட்டனர். பின், விரைவாக சாலை சீரமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து சென்றது. சாலையில், விழுப்புரம் எல்லீஸ்சத்திரத்தில் மேம்பாலம் கட்டும் கட்டுமான பணிகள் நடக்கிறது.பல மாதங்களாக நடக்கும் இந்த பணிகளையொட்டி, விழுப்புரம் நகரில் இருந்து, எல்லீஸ்சத்திரத்திற்கு செல்லும் வாகனங்களும், இந்த வழியில் இருந்து விழுப்புரத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் இருபுறங்களில் உள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்தி செல்கின்றனர்.இந்த சர்வீஸ் சாலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி சாலை படுமோசமானது.இதில் பயணிக்கும் கனரக வாகனங்கள், கார்கள் மூலம் வெளியேறும் மணல் புழுதி புகையில் சிக்கி, வாகன ஓட்டிகள் பலரும் எதிர்திசை வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி, மேம்பாலம் கட்டும் பணிகள் முடியும் வரை சர்வீஸ் சாலையை முறையாக சீரமைத்து தருவதற்கான துரித நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.