நீச்சல் குளத்தை துணை முதல்வர் ஆய்வு
விழுப்புரம்; விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தை துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அரசு நீச்சல் குளம் அமைந்துள்ளது. இங்கு, மாணவ, மாணவிகள் பலரும் நீச்சல் பயிற்சி பெறுகின்றனர். இந்த நீச்சல் குளத்தை, நேற்று துணை முதல்வர் உதயநிதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது, நீச்சல் குளத்தின் தற்போதைய நிலை, இங்கு பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை, பாதுகாப்பு, முதலுதவி உபகரணங்களின் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.தொடர்ந்து, நீச்சல் குளத்தில் நீரை சுத்திகரிக்கும் குளோரின் எந்தளவு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை துணை முதல்வர் ஆய்வு செய்தார். அதில், குளோரின் அளவு குறைவாக இருந்ததால், அங்கிருந்த நீச்சல் பயிற்சி கூட அலுவலரிடம் கேட்டார். அவர், சரியான அளவு குளோரின் தண்ணீரில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியதன் பேரில், அங்கிருந்த அதிகாரி ஒருவர் மூலம் நீச்சல் குளத்தில் உள்ள நீரை சிறிது குளோரின் அளவு பரிசோதனைக்காக கொண்டு சென்றார். தொடர்ந்து, நீச்சல் குளத்தை முறையாக தொடர்ந்து பராமரித்திட வேண்டும், என அங்குள்ள அதிகாரிகளுக்கு, துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார்.