உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிலம்ப கலையில் சாதிக்க துடிக்கும் விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவி

சிலம்ப கலையில் சாதிக்க துடிக்கும் விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவி

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீபா. கல்லுாரி மாணவி. அதே பகுதியில் உள்ள சிலம்ப பயிற்சி நிலையத்தில், தொடர்ந்து 5 ஆண்டுகள் கடுமையான பயிற்சி மேற்கொண்டார். சிலம்ப பயிற்சியாளர் சுரேந்தர் அளித்த ஊக்கத்தின் காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு நடந்த மாநில சிலம்ப போட்டியில், இரண்டாம் இடத்தை பிடித்தார். கள்ளக்குறிச்சி, சேலம், சென்னை, தர்மபுரி ஆகிய இடங்களில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று, முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளார். மேலும் 'புக் ஆப் ரெக்கார்ட்' மூலம் சிறந்த மாணவி விருதை பெற்றுள்ளார்.கடந்த 2024ம் ஆண்டு பிளஸ் 2 வகுப்பு பயின்ற போது, அரசு பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட அளவிலான போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தார். 'மனிதம் காப்போம்' குழுவின் மூலம் சிறந்த சாதனை பெண்மணி என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லுாரியில், சிலம்பத்தில் பெற்ற சிறப்பிட சான்றிதழ் மூலம், விளையாட்டு ஒதுக்கீடு அடிப்படையில், சேர்க்கை கிடைத்தது. பொது சேவையில் ஆர்வமுள்ள பிரதீபா, சமூகப்பணி படிப்பை தேர்ந்தெடுத்து படித்து வருகிறார். மத்திய அரசு விளையாட்டு அமைச்சகம் நடத்திய போட்டியில் முதலிடம் பிடித்தார். தற்போது, 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சிலம்பம் பயிற்சி அளித்து, பயிற்சியாளராக உள்ளார். இவரது சேவையை பாராட்டி, புதுச்சேரியில் நடந்த விழாவில், சிறந்த பயிற்சியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த 'உதவும் உள்ளங்கள்', 'எக்ஸ்னோரா', 'சேவை கரங்கள்' ஆகிய அமைப்புகள் சார்பில் விருது பெற்றுள்ளார்.இவர், சாதனைகள் பல புரிந்தாலும், மேலும் சாதிக்க வேண்டும் என பயிற்சி பெற்று வருகிறார். ஆர்வமுள்ள பெண்கள் அனைவருக்கும் சிலம்ப பயிற்சி அளிப்பதும், சமூக சேவைகள் செய்வதும் முக்கியமான லட்சியம் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை