உள்ளாட்சி நியமன பதவிகளில் விதிமீறல்! கொதித்தெழுந்த மாற்றுத் திறனாளிகள்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுக்கான நியமன பதவிகளில், ஆளும் கட்சியினர், குற்ற பின்னணி உடையவர்களை நியமித்து விதிமீறல் நடந்துள்ளதாக கொதித்தெழுந்த மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் விதத்தில், தலா ஒரு அமைப்புக்கு, ஒரு நியமன உறுப்பினர் பதவியை நியமிக்க அரசு கடந்த கடந்த ஜூன் 26ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளில் உறுப்பினர் நியமனம் செய்வதற்கு, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ஜூ லை 31ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெற்றனர். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் பலர் ஆர்வம் காட்டாததால், கலெக்டர் மற்றும் அதிகாரிகள், மாற்றுத் திறனாளி சங்கங்கள் மற்றும் அது சார்ந்த சமூக பணியாளர்களுக்கு, விதிகள்படி நியமன பதவி கிடைக்கும் என நம்பிக்கை ஏற்படுத்தினர். இதனால், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் பலர் விண்ணப்பித்தனர். ஒரு மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர், 13 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 688 ஊராட்சி உறுப்பினர்கள், 3 நகராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்வும் நடந்து, பட்டியல் தயாராகியுள்ளது. இந்நிலையில், இத்தேர்வில் விதிகள் பின்பற்றாமல், அரசியல் பின்புலம் உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிக்கு சேவை செய்யாத நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 10:00 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தால், அவர்கள் போராட்டத்தை 1:30 மணியளவில் கைவிட்டனர். இது குறித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், 'தமிழக அரசு அறிவிப்பை நம்பிய மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் பலர், 2,000 ரூபாய் வரை செலவிட்டு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், விதிகளை மீறி, மாற்றுத் திறனாளி அல்லாதவர்கள், குற்றபின்னணி உடையோர், ஆளும் கட்சியினர் ஆதரவு பட்டியல் படி தேர்வு நடந்துள்ளது. வெளிப்படை தன்மையோடு, பொருத்தமான நபர்களை தேர்வு செய்யவும், விதிகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவிகளை வழங்க வலியுறுத்தி வருகிறோம்' என்றார். சிகரம் மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் சுந்தர்ராசு கூறுகையில், 'தமிழக அரசு அறிவித்த நியமன பதவிகளை அரசியல் கட்சியினர் தான் பயன்படுத்துவார்கள் என நினைத்து நாங்கள் விண்ணப்பிக்கவில்லை. ஆனால், விதிகள்படி ஐவர் குழுவால் மாற்றுத்திறனாளிகள் தேர்வு நடக்கும் என அதிகாரிகள் கூறியதால், எங்கள் சங்கத்தினர் பலர், அந்தந்த பகுதிகளில் விண்ணப்பித் தனர். ஒரு மாத உதவித்தொகையை செலவு செய்தனர். ஆனால், தற்போது ஆளும் கட்சி ஆதரவு சங்கத்தினருக்கு மட்டும் பணி வாய்ப்பு வழங்கப்படுவதால் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம். அரசியல் பேதமின்றி தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்' என்றார்.