வாக்காளர் சேர்ப்பு பணி 27, 28, ஜன., 3, 4 தேதிகளில் முகாம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் 4 நாட்கள் நடக்கிறது. விழுப்புரம் கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 12ம் தேதி வரை நடந்துள்ளது. இதனை தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் நாளை 27ம் தேதி, 28ம் தேதியும் தொடர்ந்து ஜனவரி 3 மற்றும் 4ம் தேதியும் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர்களை சேர்ப்பது, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் இந்த முகாமில் மேற்கொள்ளப்படுவதால், பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.