உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கோதுமை... தட்டுப்பாடு; சப்ளை இல்லாததால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி

மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கோதுமை... தட்டுப்பாடு; சப்ளை இல்லாததால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி

விழுப்புரம் மாவட்டத்தில் 1160 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் நகரப்பகுதிகளான திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 260 ரேஷன் கடைகள் உள்ளது. ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு கோதுமை வழங்குவது இல்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், அரசு சார்பில் மத்திய அரசு கோதுமை சப்ளையை குறைத்து விட்டதால்தான், பொது மக்களுக்கு கோதுமை வழங்க முடியவில்லை என் என மாநில அரசு கூறுகிறது. ரேஷன் கடைகளில் சாதாரண ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்குகிறது. இதில், அரிசிக்கு பதிலாக விருப்பத்தின் பேரில் 5 கிலோ வரை கோதுமை வாங்கிக் கொள்ளலாம் என கூறியிருந்தது. பெரும்பாலும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் புழுங்கல் அரிசி தரமானதாக இருப்பதில்லை என்பதால், புழுங்கல் அரிசிக்கு பதிலாக கோதுமை மற்றும் பச்சரிசியை வாங்கி செல்கின்றனர். கொரோனா காலத்தில் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி குறைந்தது 5 கிலோ அளவிற்கு கோதுமை வழங்கப்பட்டது. வறுமையில் உள்ள குடும்பங்களில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரேஷன் கடைகளில் கோதுமையை வாங்கி பயன்படுத்தி வந்தனர். தற்போது ரேஷன் கடைகளில் கோதுமை வழங்கப்படுவதில்லை என்பதால், வெளி மார்க்கெட்டில் கோதுமை 40 ரூபாய்க்கும், கோதுமை மாவு 50 ரூபாய் வரை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக துவரம் பருப்பு, பாமாயில் மட்டும் தமிழக அரசு மூலமும், சர்க்கரை, அரிசி, கோதுமை ஆகியவை மத்திய அரசு மூலமும் ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கோதுமை சப்ளை வெகுவாக குறைந்து விட்டது. உதாரணமாக நகரப் பகுதியில் 1000 கார்டுகள் உள்ள ரேஷன் கடைளில் 100 கிலோ கோதுமையும், கிராமப்பகுதியில் 400 கார்டுகள் உள்ள கடைகளுக்கு 40 கிலோ அளவிற்கு கோதுமை ஒதுக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு, கோதுமை கொடுப்பதில் விற்பனையாளர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் கோதுமை கேட்கின்றனர். குறைந்த அளவில் சப்ளை இருப்பதால், ரேஷன் கடை ஊழியர்களுடன் பொது மக்கள் வாக்குவாதம் செய்யும் நிலை உள்ளது. பொதுவாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதத்திற்கு ஒரு கிலோ கோதுமை கூட கொடுக்க முடியாத அளவிற்கு பல ரேஷன் கடைகள் உள்ளது. இதுபற்றி ரேஷன் கடை விற்பனையாளர்கள் தரப்பில் கூறுகையில், 'ரேஷன் கடைகளில் பல மாதங்களாக கோதுமை ஒதுக்கீடு குறைந்து விட்டது. இதனால், அனைவருக்கும் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால், கார்டுதாரர்கள் எங்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். அதிகமாக கோதுமை ஒதுக்கீடு செய்தால்தான், பொது மக்களுக்கு கோதுமை வழங்க முடியும்' என்கின்றனர். விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கோதுமையை ரேஷன் கடைகளில்தட்டுப்பாடின்றி கிடைக்க ஒதுக்கீடு செய்வதற்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ