விளைநிலங்களில் புகுந்து காட்டு விலங்குகள் தாக்குதல்... அதிகரிப்பு; காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட விளைநிலங்களில், பேரிடர் கால பாதிப்பை விட, காட்டு விலங்குகள் தாக்குதலால் பயிர்கள் அதிகம் சேதமடைந்து வருவதால், பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஹரிதாஸ், வேளாண் இணை இயக்குநர் சீனுவாசன், தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன், மின்துறை மேற்பார்வை பொறியாளர் நாகராஜன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் குறைகள் மற்றும் கோரிக்கை குறித்து பேசியதாவது: பெஞ்சல் புயலில் சேதமடைந்த ஏரி, வாய்க்கால்களை சீரமைக்காததால் வரும் வடகிழக்கு பருவமழையால் பெரும் பாதிப்பு ஏற்படும். விரைந்து சீரமைக்க வேண்டும். சில கூட்டுறவு வங்கி அலுவலர்கள் விவசாயி களை மிரட்டும் நிலை உள்ளது. கரும்பு பயிர் கடன் வழங்குவதற்கு 90 நாட்கள் அவகாசம் என, தவறான தகவல் கூறுவதால், விவசாயிகள் உரிய நேரத்தில் கடன் பெற்று பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து வரும் மரகதபுரம், ஆழாங்கால் வாய்க்கால்கள் நீண்டகாலம் சீர்படுத்தாமல் உள்ளதால், ஏரிகளுக்கு தண்ணீர் வருவதில்லை. இந்த வாய்க்கால்கள் மூலம் 8000 ஏக்கர் பாசனம் இருந்தும், உரிய காலத்தில் தண்ணீர் வராமல் பாதிக்கிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடக்கிறது. மாவட்டத்தில், நீண்ட காலமாக விளை நிலங்களில் காட்டுப்பன்றி தாக்குதல் தொடர்கிறது. குரங்கு, மயில், எலி போன்ற விலங்கினங்கள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ஆனால், இந்த சேதங்களுக்கு நிவாரணமும் இல்லை, பயிர் காப்பீடில் பயனும் இல்லை. பெருமழை, வெள்ளம் பாதிக்கும் பேரிடர் காலங்களை விட, தொடர்ச்சியாக காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்கினங்களின் தாக்குதலால்தான் பயிர்கள் பாதித்து நஷ்டம் ஏற்படுகிறது. பயிர் காப்பீடு செய்தால், மழை, வெள்ளம் பாதிப்புக்கு மட்டும், பல நிபந்தனைகளுடன் நிவாரணம் தருகின்றனர். விலங்கினங்களால் ஏற்படும் பாதிப்பிற்கு வனத்துறையும் நிவாரணம் தருவதில்லை. கணக்கெடுத்து செல்வதோடு சரி. அரசுக்கு பரிந்துரைத்து, விலங்கினங்களால் சேதமாகும் பயிர்களுக்கும் காப்பீடு திட்டத்தில் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாய கூட்டத்தில் நாங்கள் கூறும் குறைகள் குறித்து பதில் வருவதில்லை. எசாலம் ஏரி கலிங்கல் சீரமைக்க வேண்டும். கண்டாச்சிபுரம் கால்நடை மருந்தகம் செயல்படவில்லை. டி.ஏ.பி., உரம் கிடைக்கவில்லை. பல விவசாயிகளுக்கு நிறுத்தப்பட்ட கிசான் உதவித் தொகை திரும்ப வழங்கவில்லை. பல ஆண்டுகளாக அலை கழிக்கப்படுகின்றனர். இவ்வாறு விசாயிகள் பேசினார். கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதிலளிக்கையில், 'வனவிலங்கு சேதத்திற்கு காப்பீடு திட்டத்தில் இழப்பீடு இல்லை. அது குறித்து, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கிசான் நிதி திட்டத்தில், தவறானவர்களை நீக்க தொடர்ந்து அப்டேட் நடந்து வருகிறது' என்றனர்.