கிராமங்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்துமா
நாடு முழுதும் மக்கள் தொகை பெருக்கம், பொருளாதார வளர்ச்சி போன்று, குற்ற செயல்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குற்ற செயல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை. போலீசார் ஒரு குற்ற செயலை கண்டுபிடிப்பதற்கு முன்பே அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன.தங்கத்தின் விலை அதிகரிக்க அதிகரிக்க வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதும், செயின் பறிப்பும் அதிகரித்து விட்டன. இது போன்ற சம்பவங்களின் போது துப்பு துலக்க கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.சில நாட்களுக்கு முன் சென்னையில் தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகியை கொலை செய்த சம்பவத்திலும், 6 இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்திலும் குற்றவாளிகளை உடனுக்குடன் பிடிக்க கண்காணிப்பு கேமராக்களே உதவியாக இருந்தது.தமிழகம் முழுதும் முக்கிய நகரங்களில் போலீசார் முழுவீச்சில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து விட்டனர். நிதி பற்றாக்குறை காரணமாக கிராமப்புறங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படவில்லை.குறிப்பாக கிராமங்கள் நிறைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அடிக்கடி ஆடு, மாடு, பைக் திருட்டு சம்பவங்களும், பகலில் பூட்டை உடைத்து திருடி செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. அத்துடன் விபத்து ஏற்படுத்திவிட்டு பலரும் தப்பி சென்று விடுகின்றனர். இந்த சம்பவங்களின் போது நகர பகுதியில் போலீசார் அமைத்துள்ள கண்காணிப்பு கேமரா, தனி நபர்கள் வீடு, கடைகளில் அமைத்துள்ள கேமராவின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுகின்றனர்.கிராமங்களில் கேமரா இல்லாமல் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்படுகிறது. தெரு மின்விளக்குகள், குடிநீர் வசதி எப்படி கிராமத்திற்கு முக்கியமானதாக உள்ளதோ அதேபோல் கிராம மக்களின் பாதுகாப்பிற்கு கண்காணிப்பு கேமராக்களும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.கண்காணிப்பு கேமராவுக்கு செலவு செய்ய கிராம ஊராட்சிகளில் நிதி ஏதும் இருப்பதில்லை. ஆனால் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மூன்றில் ஒரு பங்கு தொகையை அரசுக்கு செலுத்தினால் மீதமுள்ள தொகையை அரசிடம் பெற முடியும்.இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்திக்கு தகுந்த ஆலோசனையும், வழிகாட்டுதலையும் வழங்கி கிராமங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.