மாந்திரீகம் செய்வதாக கூறி மோசடி; நகையை அபேஸ் செய்த பெண் கைது
விழுப்புரம்; விழுப்புரம் அருகே மாந்திரீகம் செய்வதாக கூறி நகையை அபேஸ் செய்த பெண் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் அருகே உள்ள சின்னக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாலா மனைவி சூர்யகலா, 22; இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிபாலன் மனைவி கவுரி,29.கடந்த ஒரு மாதத்திற்கு முன், சூர்யகலாவின் கால் சவரன் தங்க கம்மல் காணாமல் போனதாக, கவுரியிடம் கூறியுள்ளார். மாந்திரீகம் செய்தால் நகை கிடைத்துவிடும் என்று கூறிய கவுரி, வீட்டில் உள்ள மற்ற நகைகளை கொண்டு வரும்படி சூர்யகலாவிடம் கூறினார்.இதை நம்பிய சூர்யகலா, தனது 2 சவரன் செயின், ஒன்றரை சவரன் பிரேஸ்லெட்டை கவுரியிடம் கொடுத்துள்ளார். கவுரி, தனக்கு தெரிந்த ஜோதிடர் ஒருவரிடம் கொண்டு சென்று மாந்திரீகம் செய்துவிட்டு எடுத்து வருவதாக கூறிச் சென்றார். சில மணி நேரம் கழித்து வந்த கவுரி, நகையுடன் விபூதியையும் கொடுத்தார். சூர்யகலா அந்த நகையை வாங்கி பீரோவில் வைத்து பூட்டினார்.அடுத்த சில தினங்களுக்கு பின், சூர்யகலாவின் கணவர் பாலா, அந்த நகையை அடகு வைக்கச் சென்றார். நகையை அடகு கடைக்காரர் பரிசோதித்ததில், கவரிங் என தெரிந்தது.சூர்யகலாவிடம் இருந்து தங்க நகையை வாங்கிய கவுரி, அதற்கு பதிலாக கவரிங் நகையை திருப்பி கொடுத்தது தெரிய வந்தது. சூர்யகலா கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து கவுரியை கைது செய்தனர்.