அறுந்து விழுந்த மின் கம்பி பெண் படுகாயம்
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்காப்பேர் காலனி மாரியம்மன் கோயில் வீதியில் வசித்து வருபவர் ரவி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா, 48 மற்றும் மகன் விஜயகுமார், 33; நேற்று முன்தினம் காலை 7;00 மணிக்கு வீட்டிற்கு எதிரே வீதியோரம் வீட்டு வேலையில் ஈடுபட்டனர். அப்போது அருகில் உள்ள மின்தொடரில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு மின் கம்பிகள் மூன்று இடங்களில் அறுந்து விழுந்தன. இதில் அறுந்த மின்கம்பிகள் உடலில் சுருட்டிக் கொண்ட நிலையில் மின்சாரம் தாக்கி மஞ்சுளா துாக்கி வீசப்பட்டார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள அரியூர் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவல் அறிந்த மின்துறை ஊழியர்கள் அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைத்தனர்.