எனது ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள் செஞ்சியில் சீமான் ஆவேசம்
செஞ்சி: ''எனது ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள்'' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், செஞ்சி கோட்டையை, தமிழ் மன்னன் கோனேரிகோன் கோட்டை என அறிவிக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தமிழர்களின் வரலாற்று சுவடுகளை திட்டமிட்டு மறைத்தார்கள். வல்லபாய் பட்டேலையும், ஜான்சி ராணியையும் படித்தோம். வா.உ.சி.,யும், வேலுநாச்சியாரும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர். செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்களின் படைத்தளம், பயிற்சிகளம் என்று யுனெஸ்கோவை அறிவிக்க சொன்ன பிரதமர், கங்கைகொண்டசோழபுரத்திற்கு எதற்காக வந்தார். யார் அழைப்பின் பேரில் வந்தார். அதை எதிர்த்து நான் அறிக்கை விட்டதால் நரேந்திரமோடி அங்கு வந்து நிற்கிறார். கங்கைகொண்டசோழபுரம் வந்த பிரதமர் மோடி, ராஜராஜசோழன், ராஜேந்திர சோழனுக்கு சிலை எழுப்புவேன் என்று சொல்கிறார். அதை கொடுத்து, இதை பெற முயற்சிக்கிறார். இத்தனை ஆண்டாக திராவிட ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள். சிவன் ஆட்டத்தை நீங்கள் சினிமாவில் பார்த்திருப்பீர்கள். சீமான் ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள். அடுத்த 4 மாதத்தில் மொத்த ஆட்டத்தையும் என் பக்கம் திருப்புவேன். எனக்கு துாக்கம் வரவில்லை, இனி யாரையும் துாங்க விடமாட்டேன் என பிரகடனம் செய்கிறேன். இவ்வாறு சீமான் பேசினார். விஜயை சீண்டிய சீமான் நடிகர் விஜயின் த.வெ.க., கட்சியை குறிப்பிட்டு சீமான் பேசுகையில், த.வெ.க., வினரை பார்த்து உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் தளபதி, தளபதி, தளபதி என்கின்றனர். அப்படி கத்தாதிங்க எனக்கு தலைவிதி தலைவிதின்னு கேட்குது என்றேன். சரி, எங்க வந்தீங்கன்னு கேட்டா, டி.வி.கே., டி.வி.கே,ன்னு சொல்றாங்க. அது, டீ விக்க, டீ விக்க என கேட்குது. புலி வேட்டையாடும் போது, அணில் குறுக்கும் நெடுக்கும் ஓடி கொண்டு இருக்கிறது. அணிலே அணிலே ஓரமாய் போய் விளையாடு, குறுக்க நெடுக்க வராதே என்று கிண்டலடித்து பேசினார்.