மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இளம்பெண் தர்ணா போராட்டம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண், மகளிர் போலீஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகள் அக்சிலியா ஜெயசீலி, 34; இவர், நேற்று மாலை 3.00 மணிக்கு, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். அங்கு, பணியிலிருந்த பெண் போலீசார், அவரை சமாதானம் செய்து விசாரித்தபோது அக்சிலியா ஜெயசீலி கூறியதாவது;தெளி கிராமத்தை சேர்ந்த அன்ட்ரோ ஜெயகுமார்,30; என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்தோம். திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகினார். கடந்த ஒரு மாதமாக என்னிடம் பேசவில்லை. விசாரித்தபோது, அவருக்கு பெற்றோர் வேறொரு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்தது தெரிய வந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டபோது, முடியாது என கூறி என்னை மிரட்டி அனுப்பினார்.விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், அன்ட்ரோ ஜெயக்குமார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.போலீசார் தொடர்ந்து சமாதானம் செய்தும், தன்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை விலக்கி கொள்ள மாட்டேன் என கூறி நேற்று இரவு வரை போராட்டத்தை தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.