பெண்ணின் கையை கட்டி போட்டு பலாத்காரம்: வாலிபர் கைது
வானுார்: பெண்ணின் கையை கட்டி, வாயில் துணியை திணித்து பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து தனது மகன்களுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாய் இறந்து விட்டார். அதன் பிறகு, அந்த பெண், அச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்த 42 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் வசித்து வந்தார். கோட்டக்கரை காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காத்தவராயன் மகன் சேட்டு (எ) கவிதாசன், 29. அவரது மனைவி குடும்ப தகராறில் பிரச்னை ஏற்பட்டு, சொந்த ஊருக்கு சென்று விட்டதால், அச்சரம்பட்டு நபருடன் வசித்து வந்த சகோதரி முறையான 32 வயது பெண்ணை வீட்டிற்கு சமைப்பதற்கு அழைத்துள்ளார். அதையேற்று அந்த பெண்ணும், சேட்டு வீட்டிற்கு சமைக்க சென்றுள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த சேட்டு, வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, அந்த பெண்ணின் வாயில் துணியை திணித்து, கைகளை கட்டி போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கவிதாசனை கைது செய்தனர்.