வேன் மீது பைக் மோதல் விபத்தில் வாலிபர் பலி
வானுார்: மினி வேன் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். விழுப்புரம் பிடாகம் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ், 21; இவர் வானுார் அடுத்த கிளியனுாரில், உள்ள அவரது சித்தி செல்வி என்பவரது வீட்டில் தங்கி மொபைல் போன் சர்வீஸ் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு கிளியனுாரில் இருந்து புதுச்சேரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். புதுச்சேரி-திண்டிவனம் சாலையில், புள்ளிச்சப்பள்ளம் பாலத்தின் மீது சென்றபோது, முன்னால் சென்ற மினிவேன் டயர் வெடித்து திடீரென நின்றிருந்ததை பார்க்காமல், துரைராஜ் ஓட்டிச்சென்ற பைக், அதன் பின் பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வானுார் போலீசார் அவரது உடலை மீட்டு காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிளியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.