ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வேகமாக பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல், வனத்துறையினர் தவித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள நீர்காத்த அய்யனார் கோயிலில் இருந்து 5 கி.மீ.,தூரத்தில் உள்ளது ராஜாம்பாறை பீட். இந்த வனப்பகுதி வழியாக முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆங்காங்கே மின்கோபுரம் அமைத்து, நாகர்கோவிலுக்கு மின்சாரம் செல்கிறது. மின்கோபுரத்தில் இருந்து செல்லும் உயர்அழுத்த மின்கம்பிகள் உரசியதால், நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீப்பொறி வனப்பகுதிக்குள் விழுந்தது. இதில் அங்கு இருந்த காய்ந்த தரகு புல்லில் தீப்பிடித்தது. இரவில் ராஜபாளையம் வனத்துறையினர் தீ தடுப்பு கோடு எனும் பாதை வழியாக ராஜாம்பாறை பீட் பகுதிக்கு சென்றும் தீயை அணைக்க முடியவில்லை. காற்று வேகமாக வீசுவதால், பல கிலோமீட்டருக்கு தீ பரவியது. இதில் அரிய வகை மூலிகைகள் கருகியிருக்கும் வாய்ப்பு உள்ளது.
வன உயிரின காப்பாளர் அசோக்குமார் மேற்பார்வையில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, கல்லுப்பட்டி, சாப்டூர் பகுதிகளை சேர்ந்த வனத்துறையினர் நேற்று காலையில் இருந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தீ பிடித்த பகுதி அருகே தண்ணீர் வசதி இல்லை, மேலும் வனத்துறையினர் தீ தடுப்பு கருவிகள் கொண்டு செல்லாததால், மரக்கிளைகளை வெட்டி, தீயை அணைக்க முயற்சி செய்கின்றனர். வேகமாக வீசும் காற்றினால், பரவும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் யானை, சிறுத்தை கரடி, மான், வரை ஆடு, சாம்பல் நிற அணில்கள், ராஜநாகம் உள்ளன. தீ தொடர்ந்து எரிவதால் வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.