| ADDED : ஜூலை 11, 2011 10:52 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : பருத்தி செடிகளை மாவுபூச்சி தாக்குதலிலிருந்து காப்பாற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய முதல்வர் ஜெயராஜன் நெல்சன் ஆலோசனை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தாவது: பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட செடிகள் மஞ்சள் நிறமாக மாறி, வாடி காய்ந்து விடும். மாவு பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற துளிகள் இலைகளில் படிந்து பள பள மின்னும். இதை குடிக்க வரும் எறும்புகள் மாவு பூச்சியின் குஞ்சுகளை அடுத்த செடிகளுக்கு எடுத்து சென்று பரப்பி விடுகின்றன. இப்பூச்சி பருத்தியை தவிர வெண்டை, புடலை, கோவை, செம்பருத்தி, புகையிலை , வாழை, கொய்யா, போன்ற செடிகளிலும் தாக்கப்படும். இந்நோயை கட்டுப்படுத்த வயலை சுற்றி சோளப்பயிரை நெருக்கமாக வேலி போல பயிரிட்டால் மாவு பூச்சிகள் வயலினுள் வருவது தடுக்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக தழைச்சத்து உரங்களை இடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
இதை கட்டுப்படுத்த மீதைல் பாரத்தியான் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லிவீதம் அல்லது குளோர்பைரிபாஸ் மருந்தினை ஒருலிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் நனையும் படி தெளிக்க வேண்டும். மருந்து கரைசல் பயிரின் பாகங்கள், மாவு பூச்சிகளின் மீதுள்ள மாவு போன்ற படலத்தினுள் நன்கு பரவி படிவதற்காக வேளாண் திரவ சோப்புகளான சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் ,தனுவெட் போன்றவற்றுள்ள ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி தெளிக்க வேண்டும். பயிர் வளர்ச்சியை பொறுத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை மருந்து கரைசலை தெளிக்க வேண்டும், என்றார்.