நான்கு வழிச்சாலையால் குறைந்தது நீர்பிடிப்பு அளவு; சங்கடத்தில் முதுகுடி கண்மாய் விவசாயிகள்
ராஜபாளையம்: திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலையால் கண்மாயின் நீர்பிடிப்பு பரப்பு குறைந்தது, கொட்டப்படும் குப்பை, சேதமான மடைகள், உட்பட பல பிரச்னைகளால் தண்ணீர் தேக்க முடியாமல் முதுகுடி கண்மாய் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் ஊராட்சிக்குள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதுகுடி கண்மாய் 98 ஏக்கர் பாசன பகுதியுடன் அமைந்துள்ளது. இதில் தண்ணீர் நிறைந்தவுடன் முதுகுடி கிழக்கு, மேற்கு குடியிருப்பு, புளியங்குளம் கண்மாய் பகுதிகள் பாசன வசதியும், நிலத்தடி நீர்மட்டம் மூலம் பயன்பெறுகின்றன. ராஜபாளையம் கருங்குளம் கண்மாயில் இருந்து நேரடியாக தண்ணீர் பெறுவதால் சீசன் காலங்களில் முதல் மழைக்கே கண்மாய் நிறைந்துவிடும். இருப்பினும் தற்போது கண்மாய் நடுவே செல்லும் திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலையால் கூறு போடப்பட்டு கண்மாயின் நீர் பிடிப்பு பகுதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கண்மாயை ஒட்டிய விவசாய பகுதியை பிரிக்கும் ரோட்டால் அடுத்த பகுதிகளுக்கு பாசன நீரை கொண்டு செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. முறையாக துார்வாரி பல வருடங்கள் ஆனதால் நாளடைவில் கண்மாய் பராமரிப்பின்றி போனதுடன் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் பாசன நீரோடு குப்பையும் கலந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஏற்கனவே நான்கு வழிச்சாலையால் மண் கொட்டப்பட்டு பரப்பளவு சுருங்கிய நிலையில் மேம்பாலத்தின் கீழ் பகுதி உள்ள நீர் பிடிப்பையும் சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. கண்மாயின் கலிங்கல் பகுதிகளை திறந்தவெளி பாராக மாற்றி பாட்டில்களை உடைத்தும், பிளாஸ்டிக் கப் உள்ளிட்டவற்றை கண்மாயிலேயே போட்டு விடுகின்றனர். பழங்கால ஷட்டர் பாசன மடைக்கு மாற்றாமல் வைத்துள்ளனர். தண்ணீர் திறக்கும் போதும் கசிவதை தடுக்க அடைக்கும் போதும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.