நூறு சதவீத வரி வசூல்; ஸ்ரீவி., நகராட்சி தீவிரம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் நூறு சதவீத வரி வசூல் சாதனையை எட்டுவதற்கு நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.நூற்றாண்டு பெருமை கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, கடந்த பல ஆண்டுகளாக 100 சதவீத வரி வசூல் செய்து தமிழக அரசின் விருதினை பெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு மற்றும் ஓரிரு ஆண்டுகளில் அந்த சாதனையை நிகழ்த்த முடியாத நிலை ஏற்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியில் பணியாற்றிய பில் கலெக்டர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஒருபுறம் வரி உயர்வு, தாமதமாக கட்டினால் அபராதம், புதிய பில் கலெக்டர்கள் நியமனம் என பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் நகராட்சியின் அனைத்து பிரிவு ஊழியர்களும் முழு வீச்சில் தீவிர வரி வசூலில் இறங்கினர்.அதிக வரி செலுத்த வேண்டிய தொழில் நிறுவனங்களிடம் கமிஷனர், மேனேஜர், பொறியாளர் என மேல் அதிகாரிகளே நேரடியாக வரி வசூலில் ஈடுபட்டனர். தற்போது வரை 95 சதவீததிற்கு மேலாக வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் 100 சதவீத நிலையை எட்ட நகராட்சி அதிகாரிகள் வரி வசூலில் தீவிரம் காட்டி வருகின்றனர்.