10.1 அடங்கல் பெற முடியாமல் அறுவடைக்கு காத்திருக்கும் நெற்கதிர்கள்
சேத்துார்; ராஜபாளையம் சுற்றுப்பகுதியில் 10.1 அடங்கல் பெற முடியாமல் அறுவடையை தாமதித்து வரும் விவசாயிகள் மழையால் கவலையில் உள்ளனர்.ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் நீர் நிலைகளை ஒட்டி கண்மாய் பாசனத்தில் பல ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு நிலையான விலை கிடைக்கும் வகையில் அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் விவசாயிகளுக்கான நில உடமைதாரர், பயிர் அடங்கல் குறித்து வருவாய் துறையினர் சார்பில் வி.ஏ.ஓ.,க்கள் சான்று வழங்க வேண்டியது அவசியம். தற்போது இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சான்று அளிக்கும் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் ஒவ்வொரு விவசாய பாசன பகுதி களங்களிலும் நெல் மூடைகள் தேங்கி உள்ளதோடு அறுவடைக்கான நெற்பயிர்கள் கொண்டு வந்து உலர்த்த இடம் இன்றி நிலங்களிலேயே விட்டு வைத்துள்ளனர். தற்போது மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. கனமழைக்கான வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் நெற்கதிர்கள் பாதிக்கப்படுவதுடன் களத்தில் தேங்கியுள்ள மூடைகள் நனைந்து சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு அத்தியாவசிய சான்றிதழ் தேவையை மாற்று வழி கண்டது போல் விவசாயிகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.