நரிக்குடியில் 300 ஆண்டு பழமையான வாமனக்கல்
நரிக்குடி : நரிக்குடி உண்டுருமி கிடாக்குளத்தில் ரோட்டோரம் இருந்த வாமனக்கல்லை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ராஜபாண்டி ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியதாவது:நரிக்குடி உண்டுருமி கிடாக்குளத்தில் ஒன்றை அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட ஒருங்கமைவு இல்லாத கல்லில் மார்பில் முப்புரி நூல், வலது கையில் குடை, இடது கையில் கமண்டலத்துடன் திருமாலின் 5ம் அவதாரமான வாமன பிராமண உருவம், மேற்பகுதியில் சூரியன், சந்திரன் கோட்டுருவங்களாக வரையப்பட்டிருந்தன. இதை வாமனக் கல் என்பர்.மாநிலம் முழுதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாமன கற்கள் திருமால் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் என தவறாக சொல்லப்படுகிறது. திருமால் கோயில் நிலத்துக்கு திருவாழிக்கல் நடுவது தான் வழக்கம். திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் குண்டூர், மீரான்குளம், சுத்தமல்லி ஆகிய ஊர்களில் பிராமணர்களுக்கு நில தானம் கொடுத்த கல்வெட்டுகளில் வாமன உருவமும் உள்ளது.சிவகங்கை மாவட்டம் பிராமணக்குறிச்சியில் அக்கிரகாரம் அமைத்துக் கொடுத்த வாணாதிராயர்கல்வெட்டில் கமண்டலம், திரி தண்டம் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன. வாமன பிராமண உருவம், கமண்டலம், சூரியன், சந்திரன் ஆகிய அடையாளங்களை கொண்டு வாமனர்கள் என்பது பிராமணர்களுக்கு தானமாக வழங்கிய பிரம்மதேய நிலத்தில் நடப்பட்ட அடையாளங்கள் எனலாம். இதை மதுரை காமராஜ்பல்கலை வெளியிட்ட கல்வெட்டு கலைச்சொல் அகர முதலியும் உறுதிப்படுத்துகிறது. பாண்டியர், சோழர் காலத்தில் வழங்கப்பட்ட பிரம்ம தேய நிலங்களில் வாமனக்கல் வைக்கும் வழக்கம் இல்லை. பிரம்மதேய நிலங்கள் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்ட தன் காரணமாக இவ்வழக்கம் கி.பி., 16ம் நூற்றாண்டுக்கு பின் உருவானது. பெரும்பாலும் ஒருங்கமைவு இல்லாத கற்களில் வாமன உருவம் கூட்டு உருவமாக வரையப்பட்ட நிலையில் தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சில இடங்களில் புடைப்பு சிற்பமாக உள்ளது. நரிக்குடி உண்டுருமி கிடாக்குளம் பகுதி பிராமணருக்கு தானமாக கொடுக்கப்பட்டிருந்த காலத்தில் இந்த வாமனர்கள் அதன் அடையாளமாக வைக்கப்பட்டிருக்கலாம். 300 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.