| ADDED : ஜூலை 28, 2024 04:55 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : புதிதாக துவக்கப்பட்ட வத்திராயிருப்பு மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக, திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார். நாளை முதல் அங்கு வழக்கு விசாரணை நடக்க உள்ளது.வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தில், மாவட்ட முன்சீப், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அருப்புக்கோட்டையில் நடந்த விழாவில் வத்திராயிருப்பு நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது.இதனையடுத்து நாளை (ஜூலை 29) முதல் வத்திராயிருப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை துவங்க உள்ளது. இனிமேல் கூமாபட்டி, வத்திராயிருப்பு, கிருஷ்ணன் கோவில், நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகும் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் வத்திராயிருப்பு நீதிமன்றத்தில் நடக்கும். இதுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜே. எம். 1. நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளும் வத்திராயிருப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணை நடைபெறவுள்ளது.