உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உதவித்தொகைக்கு உத்தரவு வழங்கியும் கிடைக்காததால் பயனாளிகள் ஏக்கம்

உதவித்தொகைக்கு உத்தரவு வழங்கியும் கிடைக்காததால் பயனாளிகள் ஏக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார் : வருவாய்த்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், முதிர் கன்னிகள், மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை கிடைக்காமல் ஏக்கத்துடன் தவித்து வருகின்றனர்.விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதிர் கன்னிகள், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் வருவாய்த்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1500 பல லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை முதலில் தபால் அலுவலகங்கள் மூலம் நேரடியாக பயனாளிகளுக்கு ரொக்கமாக வழங்கப்பட்டது. ஆனால் நடைமுறை சிக்கல்களால் தற்போது பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு சென்னை வருவாய் நிர்வாக ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து வரவு வைக்கப்படுகிறது. வங்கிக்கு சென்று வர முடியாதவர்களுக்கு தபால்காரர்கள் மூலம் பணம் வழங்கப்படுகிறது.இந்நிலையில் ஆண்டுதோறும் தாலுகா வாரியாக ஏராளமானோர் இந்த உதவித்தொகை பெற புதிதாக விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களின் விண்ணப்பங்கள் வருவாய்த்துறையினரின் நேரடி கள ஆய்வுக்கு பிறகு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில், ஒவ்வொரு தாலுகாவிலும் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கண்டறியப்பட்டு, தகுந்த உத்தரவுகள் வழங்கப்பட்டு பல மாதங்களாகியும் உதவித்தொகை வழங்கப்படவில்லை. ஆனால் வருவாய்துறை அதிகாரிகள் விரைவில் உதவிதொகை வந்து விடும் என சமாதானம் செய்து அலுவலகங்களுக்கு படையெடுக்கும் பயனாளிகளை திருப்பி அனுப்புகின்றனர். மார்ச் முதல் உதவிதொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ