கொடுக்காப்புளி பறிக்க முயன்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மத்திய சேனை அருகே கொடுக்காப்புளி பறிக்க முயன்ற 5 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான்.மத்திய சேனை கிழக்குத்தெருவை சேர்ந்த வெள்ளையன், அவரது மனைவி மகேஸ்வரி. இருவரும் பட்டாசு தொழிலாளர்கள். இவர்களது மகள் பாண்டி மீனா, மகன்கள் விஜயபிரசாத், பிரவிந் 5. விஜயபிரசாத் 2ம் வகுப்பு படிக்கிறான்.கணவன், மனைவி பட்டாசு ஆலை பணிக்கு சென்று வீடு திரும்பும் வரை பாட்டி தாயம்மாள் குழந்தைகளை கவனித்து வந்தார். பிப்.,27ல் அங்கன்வாடி சென்று விட்டு வீட்டிற்கு வந்த பிரவிந், மாலை விளையாட வெளியில் சென்றவன் இரவு வரை வராததால் தேடினர். அன்றிரவு 7:00 மணிக்கு சிங்காபுலிராமன் என்பவர் வீட்டு தகர செட்டின் மேலே செல்லும் மின் கம்பியில் சிறுவன் இறந்தது கிடந்தது தெரிந்தது.உறவினர் அழகர்சாமி பிளாஸ்டிக் பைப்பை வைத்து மின்கம்பியை தட்டி விட்டு பிரவிந்தை துாக்கி வீட்டிற்கு வந்தார். சிங்காபுலிராமன் வீட்டு தகர செட்டின் மீது ஏறி கொடுக்காப்புளி பறிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.